சேதமடைந்த கட்டடத்தில் சுகாதார நிலையம்
இளையான்குடி: இளையான்குடியில் சேதமடைந்த கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருவதால் நோயாளிகள்,கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.
இளையான்குடியில் சிவன் கோயில் அருகே உள்ள பழைய எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சாலைக்கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இக்கட்டடம் மிகவும் சேதமடைந்து அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. ஏதேனும் உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் இளையான்குடியில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு விரைவில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: இளையான்குடியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் தற்போது அங்கு தடுப்பூசி செலுத்துவது குறைக்கப்பட்டு ரசூலா சமுத்திரம் பகுதியில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றனர்.