கால் சென்டர் பெண் ஊழியர் குத்திக் கொலை: புனேயில் அதிர்ச்சி சம்பவம்

புனே: புனேயில் சக ஊழியரால் கத்தியால் குத்தப்பட்ட கால் சென்டர் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பமுயன்ற சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் எரவாடா பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான கால் சென்டரில் சுப்தா ஷகர் காதர்,28, பணிபுரிந்து வந்தார். அவர் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்ப, வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கிளம்பினார். அப்போது சக ஊழியரான கிருஷ்ணா சத்யநாராயண் கனோஜா, 30, அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நிதி தொடர்பான தகராறு ஏற்பட்டது. அப்போது, கனோஜா, சுப்தா ஷகர் காதரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார்.

கத்தியால் குத்தப்பட்ட பெண், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் மாலையில் நடந்ததாகவும், நிதி தகராறின் விளைவாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சம்பவம் குறித்து அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளில் ஆய்வு செய்ததில், கனோஜா கத்தியை காட்டி, ஷகர் காதரை மிரட்டிய நிலையில் பல முறை குத்தினான். அதிக ரத்த இழப்பால், பாதிக்கப்பட்ட அந்த பெண் வலியோடு தரையில் விழுந்து கிடந்தார். பின்னர் அந்தப் பெண் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்.
கனோஜா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Advertisement