கோப்பை வென்றது தமிழகம்: கூச் பெஹர் டிராபியில்

ஆமதாபாத்: கூச் பெஹர் டிராபியை தமிழக அணி வென்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) நடந்தது. ஆமதாபாத்தில் நடந்த பைனலில் தமிழகம், குஜராத் அணிகள் மோதின. குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 75/2 ரன் எடுத்திருந்தது.


நான்காம் நாள் ஆட்டத்தில் ஜெயந்த் (91), பிரவின் (42) கைகொடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 33 ரன் முன்னிலை பெற்றது.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய குஜராத் அணிக்கு மவுல்யராஜ்சிங் (49), நிஷித் கோஹில் (42), ருத்ரா பிரிதேஷ் படேல் (33) நம்பிக்கை தந்தனர். குஜராத் அணி 2வது இன்னிங்சில் 172/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தமிழகம் சார்பில் அம்ப்ரிஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.


பின் 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 55/1 ரன் எடுத்திருந்தது. ஸ்ரேனிக் (21), அக்சய் (17) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அடிப்படையில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை ஜெயந்த் (தமிழகம்) வென்றார்.

Advertisement