யுவராஜ் ஓய்வுக்கு கோலி காரணமா: என்ன சொல்கிறார் உத்தப்பா

புதுடில்லி: ''கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்கிற்கு எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. கோலி ஆதரவு இல்லாததால், அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்,'' என உத்தப்பா தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங், 43. கடந்த 2007ல் இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். இத்தொடரில் ஸ்டூவர்ட் பிராட் (இங்கி.,) வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். 2011ல் நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) 362 ரன், 15 விக்கெட் வீழ்த்தினார். தொடர் நாயகன் விருது வென்ற இவர், இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
'கேன்சர்' பாதிப்பு: கடந்த 2011ல் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்ட யுவராஜ், விரைவில் மீண்டார். 2012ல் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் சோபிக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்தியில், 2019ல் ஓய்வு பெற்றார். இதற்கு தோனி தான் காரணம் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம்சாட்டுவது வழக்கம். கோலிக்கும் மறைமுக பங்கு உண்டு என இந்திய முன்னாள் வீரர் உத்தப்பா புதிதாக தெரிவித்துள்ளார்.


சலுகை மறுப்பு: இது குறித்து உத்தப்பா கூறியது: 'கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், இந்திய அணியில் இடம்பெற விரும்பினார். 'யோ-யோ' உடற்தகுதி சோதனையில், தனக்கு இரண்டு புள்ளிகளை மட்டும் குறைத்து உதவும்படி கோரிக்கை விடுத்தார். இதை இந்திய நிர்வாகம் ஏற்க மறுத்தது. 'வாழ்க்கையில் கேன்சரை' வென்றிருக்கிறார். இந்தியாவுக்கு இரு உலக கோப்பை வென்று தந்திருக்கிறார்' என்ற அடிப்படையில் சலுகை அளித்திருக்கலாம். அப்போது இருந்த கேப்டன் 'உங்களது நுரையீரல் பலம் குறைந்து விட்டது' என்றார். பின் மனஉறுதியுடன் உடற்தகுதி சோதனையில் தேறி, அணியில் இடம்பிடித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சோபிக்க தவறினார். இதற்கு பின் இவரை கண்டுகொள்ளவில்லை. அந்த சமயத்தில் கேப்டனாக கோலி தான் இருந்தார். மிகுந்த செல்வாக்குமிக்கவராக இருந்ததால், இவரது விருப்பப்படியே அனைத்தும் நடந்தது.
கோலி தலைமையில் நான் விளையாடியது இல்லை. தன் வழியில் அனைவரும் நடக்க வேண்டும் என விரும்புவார். அவரது தரத்திற்கு ஏற்ப சக வீரர்களின் உடற்தகுதியும் இருக்க வேண்டும் என நினைப்பார்.


இவ்வாறு உத்தப்பா கூறினார்.

Advertisement