பெருவழிப்பாதை கட்டுப்பாடுகளில் தளர்வு

சபரிமலை:சபரிமலையில் மகரஜோதி விழாவையொட்டி பெருவழிப்பாதையில் அறிவித்த கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தி புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் பக்தர்கள் வருவதில் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஜன. 12 - ல் 60 ஆயிரம், ஜன.13 - ல் 50 ஆயிரம், ஜன. 14-ல் ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது.

தரிசன 'ஸ்பாட் புக்கிங்' எண்ணிக்கை ஜன. 12, 13 ல் 5 ஆயிரம் ஆகவும், ஜன.14 - ல் ஆயிரம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பம்பையில் செயல்பட்டு வந்த 'ஸ்பாட் புக்கிங்' கவுன்டர்கள் அனைத்தும் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதுபோல எருமேலியில் இன்று நடைபெறும் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலுக்கு பின்னர் ஜன.14 வரை பெருவழிப்பாதையில் பிற பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேட்டை துள்ளும் பக்தர்கள் அங்கிருந்து வாகனங்களில் பம்பை வந்து நீலிமலை வழியாக சன்னிதானம் வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து ஆன்லைனில் ஏற்கனவே பெருவழிப் பாதையை தேர்வு செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு முக்குழியில் இருந்து அந்தந்த நாட்களில் உள்ள நேரத்தில் பெருவழிப் பாதையில் செல்ல அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதிதாக 'ஸ்பாட் புக்கிங்' செய்பவர்கள் இந்த பாதையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement