கோவிலில் பூஜை செய்து வந்த திருடன்4 ஆண்டுக்கு பின் வளைத்த போலீஸ்



மேட்டூர்,: கேரளா மாநிலம் குருவாயூர், ஸ்ரீகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விவேக், 42. இவர், 2005ல் மேட்டூர் அடுத்த கருமலைக்கூடலில், பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டார். அவரை, கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர், 2020 முதல் தலைமறைவானார். அவரை பிடிக்க, மேட்டூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. தொடர்ந்து மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தாடியுடன் சாமியாராக மாறி இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருந்த அவர், விழுப்புரம் மாவட்டம் வானுார், திருசிற்றம்பலத்தில், சிவன் கோவில் கட்டி பூஜை செய்து வருவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நேற்று சென்ற போலீசார், சாமியார் வேடத்தில் பூஜை செய்து கொண்டிருந்த விவேக்கை, 4 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.
தேனியில் சிக்கினார்
அதேபோல் தர்மபுரி, அரூர் தாலுகா, நாச்சம்பட்டி, நடு
வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி, 24. கடந்த, 2019ல் பல்வேறு திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட அவரை, 2019ல் மேச்சேரி போலீசார் கைது செய்தனர். 2022க்கு பின், அவர் ஆஜராகாததால், மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இரு ஆண்டு தலைமறைவாக இருந்த அவர், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், திருமூர்த்தியை கைது செய்தனர்.

Advertisement