கோர்ட் உத்தரவை மறந்த அதிகாரிகள் புறநகரில் பேனர் கலாசாரம் அதிகரிப்பு

மறைமலைநகர்:புறநகரில், விதிகளை மீறி நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அதை ஒட்டியுள்ள தனியார் இடங்கள் மற்றும் கட்டடங்களின் மேல் தளங்களில், அரசு அனுமதியின்றி விதிகளை மீறி, ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் வைக்கப்படும் இந்த பேனர்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் விதத்தில் உள்ளதால், சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

நெடுஞ்சாலை ஓரம் உள்ள பெரிய பெரிய கட்டடங்கள் மீது வைக்கப்படும் பிரமாண்ட பேனர்களை, அரசு அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.

கடும் மழை, புயல் காலங்களில் கூட, உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு சாரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட அகற்றப்படவில்லை.

கட்டடங்கள் மீது அமைக்கப்படும் ரியல் எஸ்டேட், கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு, கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு வாடகை மற்றும் குத்தகையாக, பெரிய தொகை செல்கிறது.

குறிப்பாக, நெடுஞ்சாலை அருகிலுள்ள கட்டடங்கள் பல, உள்ளூர் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான கட்டடங்களான உள்ளன. இந்த கட்டடங்களில் பேனர் வைக்கப்படுவதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பேனர் கலாசாரத்திற்கு எதிராக நடவடிக்கை பெரிதாக இல்லாததால், நாளுக்கு நாள் புதிது புதிதாக பேனர்கள் முளைத்தபடி உள்ளன.

குறிப்பாக செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில், நிரந்தரமாக பல பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும், தங்கள் கட்சி மேலிடங்களை கவர, தொடர்ந்து பேனர் வைத்து வருகின்றனர். அரசியல் சாராத விளம்பர பேனர்களுக்கும் குறைவில்லை.

சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில், பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டுமென அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தினாலும், அந்த உத்தரவு எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வராததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை அருகில் பேனர் வைக்கும் போது, உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்று, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பேனர்கள் வைக்க வேண்டும் என, நீதிமன்றம் வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது. ஆனால், அதை பேனர் வைக்கும் நிறுவனங்களும், தனிநபர்களும் பின்பற்றுவதே இல்லை. இந்த பிரச்னைக்கு, நீதிமன்றம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

- சமூக ஆர்வலர்கள்,

மறைமலைநகர்.

Advertisement