ரேஷன் கடை சேதம் நரசிம்மபுரத்தினர் அச்சம்
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, நரசிம்மபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை சேதமடைந்து, இடியும் நிலையில் உள்ளதால் பொருள் வாங்க வரும் கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் வட்டம், காக்களூர் ஊராட்சியில், நரசிம்மபுரம் பகுதியில், ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த கடையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ரேஷன் கடை கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த கடை முழுதும் சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. ரேஷன் கடையின் படிக்கட்டுகளும், கூரையும் கான்கிரீட் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பி வெளியில் தெரிகிறது.
இதனால், இக் கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே, சிதலமடைந்த ரேஷன் கடையை அகற்றி, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.