அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அச்சம்
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம் கரும்பாக்கம், குருமஞ்சேரி, சிறுமயிலுார் ஆகிய பகுதிகளில், கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு மாதமாக அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யப்படும் கரும்புகளை, படாளம் கரும்பு அரவை தொழிற்சாலைக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.
அதிகளவிலான கரும்புகளை ஏற்றிக் கொண்டு, கரும்பாக்கம் --- மெய்யூர் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அவ்வாறு, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால், குறுகலான சாலை வளைவுகளில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், கிராமப்புறங்களில் சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மின்கம்பியில் உரசி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து, விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.