ஒற்றை யானை தாக்கி மூதாட்டி பலி
ஓசூர்: கெலமங்கலம் அருகே, ஒற்றை யானை தாக்கி மூதாட்டி பலி-யானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரி அருகே ஒன்னுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா மனைவி நாகம்மா, 69, கூலித்தொழிலாளி; இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு துடைப்பம் குச்சி சேகரிக்க சென்றார். அப்போது, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து, சானமாவு காப்புக்-காட்டிற்கு ஒன்னுகுறுக்கி வழியாக ஒற்றை ஆண் யானை இடம் பெயர்ந்தது. இதை பார்த்த பொதுமக்கள், நாகம்மாவை நோக்கி சத்தம் போட்டு ஓடி விடுமாறு கூறினர்.
அது நாகம்மாவிற்கு கேட்காததால், அவர் முன்னோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த ஒற்றை யானை, அவரை தந்தத்தால் குத்தி துாக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த நாகம்மா, சம்பவ இடத்திலேயே பலியானார். சடலத்தை எடுக்க விடாமல் போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். உயிரிழந்த நாகம்மாவிற்கு தலா இரு மகன், மகள்கள் உள்ளனர். நாகம்மா குடும்பத்திற்கு முதற்கட்ட-மாக, 50,000 ரூபாயை உடனடியாக வனத்துறை சார்பில் இழப்பீ-டாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள, 9.50 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.நாகம்மாவை தாக்கி கொன்ற ஒற்றை யானை, ஜெக்கேரி பகுதியில் தனியார் நர்சரி பண்ணை அருகே உள்ள புளியந்தோப்பில் தஞ்சமடைந்தது.