மத்திய அரசு போன்று பென்ஷனில் மாற்றம் இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் வலியுறுத்தல்

மதுரை: மத்திய அரசின் ஒவ்வொரு ஊதிய திருத்தத்தின் போதும் பென்ஷன் திட்டமும் திருத்தம் செய்யப்பட வேண்டும்,'' என அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் அசோசியேஷன்(ஏ.ஏ.ஐ.பி.ஏ.,) துணைத் தலைவர் சந்திரசேகரன் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அகில இந்திய பென்ஷனர்கள் சங்கத்தின் தர்ணா போராட்டம் எல்.ஐ.சி., கட்டட வளாகத்தில் நடந்தது.

மதுரை எல்.ஐ.சி., பென்ஷனர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.சந்திரசேகரன் கோரிக்கைகள் விளக்கி பேசியதாவது:

மத்திய அரசின் அனைத்து நிறுவனத்திலும் ஊதிய உயர்வு செய்யும் போது பென்ஷன் திட்டத்திலும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

விலைவாசி உயர்வது போல பென்ஷன் திட்டத்திலும் அதற்கேற்றார் போல் மாற்றம் கொண்டு வர வேண்டும். 2010 ல் புதிய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டதை ரத்து செய்யவேண்டும்.

மத்திய அரசு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வங்கி ஊழியர்களுக்கு கொடுத்தது போல எல்.ஐ.சி., ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

எல்.ஐ.சி., லாபத்தில் தான் இயங்குகிறது. மிகவும் பழமையான, நிறுவனத்தை பாதுகாக்கவேண்டும். உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட போது பல வளர்ந்த நாடுகளில் கூட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடபட்டன. இருந்தபோதும்இங்கு சேமிப்பு இருந்ததால் எந்த பாதிப்புமின்றி செயல்பட்டது.

இந்தியாவில் 26 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி., மக்களின் நம்பகத்தன்மையுடன் இயங்குகிறது. இன்று எல்.ஐ.சி., யில் 13லட்சம் முகவர்கள் உள்ளனர்.

அனைத்து மக்களிடத்திலும் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ., தலைவர் முகவர்களுக்கு கூறியுள்ளார். எப்படி மக்களிடம் அணுகுவது. சேமிப்புக்கு எதற்கு ஜி.எஸ்.டி., என்ற மக்களின் கேள்வியால் சவால்கள் நிறைந்த வேலையாக இருக்கிறது. மத்திய அரசு இதனை கைவிட வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் 16லட்சம் கடனை தள்ளுபடி செய்துள்ள அரசு, பி.எப்., பிடித்தம் செய்த எங்களுடைய தொகையை அளிக்க மறுப்பது கொடுமையானது.

1995ல் கொண்டு வந்த அதே ஊதிய உயர்வை இன்று வரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். கடைசி காலத்தில் இந்த பென்ஷன் தான் எங்களுக்கு உள்ளது. அதை மறுக்காமல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

Advertisement