வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை 4 பேர் கைது: 53 சவரன் நகை பறிமுதல்
கடலுார்: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 53சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுார் என்.எல்.சி., ஆபிசர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி பார்வதி,52; இவரது கணவர், மகன் மற்றும் மருமகள் சிங்கப்பூரில் உள்ளனர். வடலுாரில் வசித்து வந்த பார்வதி, மருமகள் வளைகாப்பிற்காக கடந்த நவம்பர் 20ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சிங்கப்பூர் சென்றார்.
இந்நிலையில் நவ.30ம் தேதி வீட்டின் கதவு திறந்து கிடக்கும் தகவலறிந்த பார்வதி, மறுநாள் வடலுாருக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 56 சவரன் நகைகள், 23 கிலோ வெள்ளி பொருட்கள் உட்பட ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், அழகிரி மற்றும் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில் கிடைத்த தகவலின்பேரில் உளுந்துார்பேட்டையில் பதுங்கியிருந்த கடலுார் நடுவீரப்பட்டு ஜெயராமன் மகன் ரஞ்சித்,24; தனுஷ் மகன் சாய்குமார்,24; கிருஷ்ணமூர்த்தி மகன் மதியழகன்,23; கணேசன் மகன் ரவிச்சந்திரன்,20; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.
குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாரை, எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.