சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேனீக்களின் பங்கு உறுப்பினர் செயலர் ரமேஷ் விளக்கம்

புதுச்சேரி : 'இளைஞர்கள் தேனீ வளர்ப்பு சுயதொழில் துவங்கி தொழில் முனைவராக வர வேண்டும்' என, மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார்ந்த துறையில் திறமையை வளர்த்து கொள்வதற்கும், சுய வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தேனீ வளர்ப்பு, மரமல்லா வன உற்பத்தி உள்ளிட்ட தலைப்புகளில் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா அப்துல் கலாம் அறிவியல் மையம் கோளரங்கத்தில் நடந்தது.

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது:

தேனீக்கள் இயற்கையின் முக்கிய அங்கம். பூக்களில் இருந்து தேனை தேனீக்கள் எடுக்கும்போது, மகரந்த சேர்க்கை ஏற்பட்டு செடி, கொடி, மரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. இதன் மூலம், உலகின் பசுமை பரப்பு அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் தேனீக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

தேன் உயரக மருத்துவ குணமுள்ள பொருள் என்பதால் இதன் தேவை அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி இளைஞர்கள் தேனீ வளர்ப்பு தொழில் தொடங்கி தொழில் முனைவராக வரவேண்டும்' என்றார்.

காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்ட மேற்படிப்பு மையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமானுஜம் சிறப்புரையாற்றினர். முன்னதாக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பொறியாளர் காளமேகம் வரவேற்றார்.

திட்ட அலுவலர் நித்யா நன்றி கூறினார்.

Advertisement