பஸ் ஸ்டாண்டில் 'நோ பார்க்கிங்' நெரிசல் தீர்க்க போலீசார் முடிவு
திருப்பூர்,: திருப்பூர் காமராஜ் ரோட்டில், மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், முன்புறம் உள்ள பகுதியில்அங்குள்ள கடைகளுக்கு வந்து செல்வோர் தங்கள் இரு சக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை நிறுத்தி வந்தனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வாகனப் போக்குவரத்தில் குளறுபடி, பஸ்கள் செல்வதில் இடையூறும் ஏற்பட்டு வந்தது. சமீபத்தில், கமிஷனராக பொறுப்பேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆய்வு செய்தார். அதில், பஸ் ஸ்டாண்ட் முன்புறப் பகுதியில் தனியார் வாகனங்கள் பார்க்கிங் செய்வதால் நிலவும் குளறுபடி குறித்து கண்டறிந்த கமிஷனர், உடனடியாக 'நோ பார்க்கிங்' நடைமுறையை கொண்டு வர அறிவுறுத்தினார். இதனால், நேற்று காலை முதல் வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதித்தனர். மீறி பார்க்கிங் செய்த வாகன ஓட்டி களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.