பள்ளி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ஊட்டி : கோத்தகிரி அருகே, 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த, 15 வயது பள்ளி சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். தனியார் பள்ளி வேனில் நாள்தோறும் சென்று வந்தார். அப்போது, பள்ளி வேனில் உதவியாளராக பணிபுரிந்த கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்,34, என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த, 2021, ஜன., 29ல் ஜெயபிரகாஷ் தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அன்று மாலை, சிறுமி வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தகவல் அறிந்த ஜெயபிரகாஷ், கோத்தகிரியில் மாணவியை விட்டு சென்றுள்ளார். உறவினர்கள் சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்த நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.

இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஜெயபிரகாசுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை; 11,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு அளித்தார்.

இதனை அடுத்து, ஜெயபிரகாஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.

Advertisement