தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்
அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், 'இதுவரை இரண்டு முறை தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கோவில் அறங்காவலர் குழு சார்பில், 15 நாட்களுக்கு முன்பே, 'உங்கள் ஊரில், உங்களை தேடி' முகாமில், கலெக்டரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு தரப்பட்டது. இறுதியாக அன்னுார் பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமாவது விடுமுறை அளிக்க கோரிக்கை மனு கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தனிடம் வழங்கப்பட்டது. எனினும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.