பொங்கல் பண்டிகை கொண்டாட தயாராகும் திருப்பூர்
திருப்பூர் : பொங்கல் பண்டிகைக்கு இரண்டே நாட்கள் இருப்பதால், மண் பானை, புத்தாடை, கோலப்பொடி, கரும்பு என, விழாக்கால விற்பனை களைகட்டியிருக்கிறது.
பெரும்பாலான வீடுகளில், புதிய மண் பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். அதற்காக, மண்பானை வாங்கி, வெளியே சுண்ணாம்பு மற்றும் வர்ணம் அடித்து தயார்படுத்தி வருகின்றனர். கரும்பு விற்பனையும், வீடுகள் தோறும், வண்ண கோலமிடுவது வழக்கம் என்பதால், கலர் கோலப்பொடி விற்பனையும் களைகட்டியிருக்கிறது. வரும், 12ம் தேதி காப்புக்கட்ட வேண்டும் என்பதால், கிராமப்புறங்களில், ஆவாரை செடி, பீளைப்பூ விற்பனைக்காக தயாராகி கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, நகரப்பகுதி மக்கள் வசதிக்காக, வேப்பிலை கட்டும், விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
சமுதாய பொங்கல் விழா
பல்வேறு கட்சியினர், விளையாட்டு அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கத்தினர், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கத்தினர், மக்களுடன் இணைந்து சமுதாய பொங்கல் விழா கொண்டாட தயாராகிவிட்டனர். பெண்களுக்கான கோலப்போட்டி, இளைஞர்களுக்கான போட்டி, சிறுவர் - சிறுமியருக்கான போட்டி என, திருப்பூர் சுற்றுப்பகுதிகள், 14 முதல் 16ம் தேதி வரை, தித்திப்பான பொங்கல் பண்டிகையை கொண்டாட முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
இன்று முதல் விடுமுறை
திருப்பூரில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை, தங்களது சொந்த ஊரில் கொண்டாட விரும்புகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக, தமிழக அரசு, 17ம் தேதி விடுமுறை அளித்துள்ளது. இதன் காரணமாக, 14ல் துவங்கி, 19ம் தேதி வரை விடுமுறை கிடைத்துள்ளது. சொந்த ஊர் செல்வதற்காக, பல்வேறு குடும்பத்தினர், 13ம் தேதியும் விடுமுறை எடுத்துக்கொண்டு, புறப்பட தயாராகிவிட்டனர்.
இன்று, பனியன் நிறுவனம் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் சம்பளம் பெறும் நாள். இன்று இரவு, சம்பளம் பெற்றதும், நாளை 'பர்ச்சேஸ்' முடித்து, இரவே சொந்த ஊருக்கு செல்ல தயாராகிவிட்டனர். இதனால், பனியன் நிறுவனங்கள், நாளை முதல், 19ம் தேதி வரை, எட்டு நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளன.