மகாராஷ்டிரா பாகன்களுக்கு தெப்பக்காட்டில் பயிற்சி முகாம்
கூடலுார் : முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம், யானைகள் வளர்ப்பிலும், பராமரிப்பு மேற்கொள்வதிலும், ஆசியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி அளிக்கப்பட்ட கும்கி யானைகள், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவது அல்லது அதனை பிடித்து யானைகள் முகாமுக்கு கொண்டு வரும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், அத்தகைய யானைகளை வளர்ப்பு யானையாக மாற்றும் பணியில் சிறப்பு பெற்றவை.
யானைகளுக்கு பாதுகாப்பு
மேலும், வனத்தில் தாயை பிரிந்த அல்லது தாயை இழந்த குட்டி யானையை சிறப்பாக பராமரிப்பதில் முதுமலை யானைகள் முகாம் உலகளவில் சிறந்து விளங்குகிறது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், இங்குள்ள குட்டி யானைகள்; -பாகன்களுக்கு இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்துக்கு, சிறந்த ஆவண படத்துக்கு 'ஆஸ்கார்' விருது கிடைத்தது.
இதை தொடர்ந்து, பிற மாநில பயிற்சி வன அதிகாரிகள், ஊழியர்கள், யானை பாகன்கள் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து, வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம், மெல்காட் புலிகள் காப்பகம் யானைகள் முகாமிலிருந்து, 7 பாகன்கள்; உதவியாளர்கள் உட்பட, 8 பேர் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்த பயிற்சிக்கு வந்தனர்.
தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த, துவக்க நிகழ்ச்சிக்கு வனச்சரகர் சிவக்குமார் தலைமை வகித்து, தெப்பக்காடு யானைகள் முகாமின் செயல்பாடுகள், வளர்ப்பு யானைகளில் கும்கியாக உள்ளவற்றின் பணிகள் குறித்து விளக்கினார். யானைகளுக்கான சிகிச்சை, வன கால்நடை மருந்தகத்தின் பராமரிப்பு குறித்து வன கால்நடை ஆய்வாளர் ரமேஷ் விளக்கினர். தொடர்ந்து, முதுமலை பாகன்களுடன் இணைந்து களப்பயிற்சியை துவங்கி உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மகாராஷ்டிரா மாநில பாகன்களுக்கான பயிற்சி முகாம், 7 நாட்கள் நடக்கும்.
அதில், முகாமின் நடைமுறைகள்; வளர்ப்பு யானைகள் பராமரிப்பு; பயிற்சி மற்றும் உணவு வகைகளை மேற்கொள்ளும் முறை; மருத்துவ சிகிச்சை, ஊருக்குள் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை பிடித்து வந்து கராலில் அடைத்து, வளர்ப்பு யானைகளாக மாற்றும் முறைகள், 'மஸ்து' காலத்தில் ஆண் யானைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது,' என்றனர்.