நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது யார்? விஜய்க்கு திருமா கேள்வி!

10

சென்னை: நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை விஜய் உணர்ந்துள்ளரா?என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.


நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொதுவான பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தாமாக முடிவுகளை எடுத்து மாநில அரசுகளை புறம் தள்ளி வருகிறது. நசுக்கி வருகிறது.


இருந்தாலும் தேர்தல் நேரத்தில் நீட் தேர்வுகளை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அளித்தது. ஒருமுறைக்கு, இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஆகவே முட்டுக்கட்டையாக இருப்பது, எதிராக இருப்பது மத்திய அரசு என்பதை த.வெ.க., தலைவர் (விஜய்) அறிந்து இருக்கிறாரா ? என்று தெரியவில்லை.



மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தான் முறை. அவர் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை, தன்னுடைய கடமையை செய்து இருக்கிறது. மத்திய அரசு அதனை தவிர்க்கிறது. நீட் தேர்வு ரகசியம் தொடர்பாக விஜய் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி விளக்கம் அளிப்பார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisement