புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்.எம்.பி.வி, தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஜிம்பர் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.


சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எச்.எம்.பி.வி., தொற்று இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் முதலில் பெங்களூருவில் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து குஜராத்தின் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் 2 மாத ஆண் குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நாக்பூரில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.


தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 45 வயது மதிக்கத்தக்க நபர், சேலத்தில் 69 வயது நபருக்கும் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் எச்.எம்.பி.வி, தொற்று பரவல் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொற்று பரவலை தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.



இந்நிலையில், இன்று (ஜன.,11) புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்.எம்.பி.வி, தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஜிம்பர் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. 'குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் காய்சல், சளி, இருமல் குணம் அடையும்' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement