நீட் ரத்து என்பது சினிமா பஞ்ச் டயலாக் கிடையாது! நடிகர் விஜய்க்கு அமைச்சர் பதில்

6

சென்னை; நீட் தேர்வு ரத்து என்பது சினிமாவில் யாரோ எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக் போல பேசுகின்ற சூழல் கிடையாது என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.



மக்களை நம்ப வைத்து ஏமாற்றவேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது, அதற்கு நீட் சான்று என்று நடிகரும், த,வெ.க., தலைவருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.


சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;


நீட் தேர்வு என்பது ஏதோ இன்றைக்கு புதியதாக வந்தது அல்ல. ஒரு நீண்ட போராட்டம். தமிழக மக்கள் அனைவருக்கும் அது தெரியும். நீட் தேர்வு வந்த போது அதை கருணாநிதி தடுத்து நிறுத்தினார்.


அவர் மறைந்த பின்னர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆட்சியில் தான் அது (நீட் தேர்வு) நடைமுறைக்கு வந்தது. அதை எதிர்த்து எனது மாவட்டம் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்னுயிரை ஈந்து அதற்கான எதிர்ப்பை பதிவு செய்த பிறகு தான், தமிழக மக்கள் மனதில் நீட்டின் கொடூரம் குறித்து தெரிய ஆரம்பித்தது.


எனவே, அதில் இருந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் தி.மு.க., தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஒரு கோடி கையெழுத்தை பெற்று ஜனாதிபதியிடம் உதயநிதி கொடுத்துள்ளார். இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.


மத்திய அரசை பொறுத்தவரை கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மருத்துவம் படித்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே அவர்களை எதிர்த்து நடைபெறுகிற இந்த போராட்டத்தில் மாநில அரசு நேரடியாக இதை (நீட்) நீக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.


எனவே சட்டம் புரிந்தால் தான், நாட்டு நடைமுறை புரிந்தால் தான், அரசு நடைமுறை புரிந்தால் தான் பேச முடியும். சினிமாவில் யாரோ எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக் போல பேசுகின்ற சூழல் கிடையாது. இது ஒரு அரசு நடைமுறை.


இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.

Advertisement