பலுான் திருவிழா
எல்லாவற்றையும் சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தில் பொள்ளாச்சிக்கு என்று நடந்துவந்த சர்வதேச பலுான் திருவிழாவினை சென்னைக்கும் கொண்டு வந்துள்ளனர்.
அநேகமாக அதிகாலை 6 மணிககு நடந்த துவக்க விழா இதுவாகத்தான் இருக்கும்.விசாரித்த போது விழா நடைபெறும் மகாபலிபுரம் அருகில் உள்ள 'திருவிடந்தை' பகுதி கடற்கரையை ஒட்டியிருப்பதால், கடற்காற்று அப்போதுதான் அமைதியாக பலுானை பறக்கவிடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.
கடல் என்னவோ அமைதியாகத்தான் இருந்தது காற்றும் வீசவில்லை ஆனால் யாரும் பலுானை பறக்கவிடவில்லை பத்து பலுானின் எட்டு பலுான் புலி,சிங்கம்,நரி வடிவிலான சிறிய ரக பலுான்களே.
அந்த பலுானில் உஷ்ணக்காற்றை நிரப்பியதும் வானை நோக்கி எழுந்தது அதனை பத்தடி உயரத்திற்கு பறக்கவிட்டு கயிறு கட்டி பிடித்துக் கொண்டனர் பலுான் இறங்குவது போல தெரிந்தால் உஷ்ணக்காற்றை நிரப்பிக் கொண்டனர்.
இந்த பட்டம் விடுவது பலுான் விடுவது போன்ற கேளிக்கையான விஷயங்களில் வியாட்நாம் மக்களுக்குத்தான் அதிகம் ஈடுபாடு.,இந்த சர்வதேச பலுான் விழாவிலும் அவர்களது ஆதிக்கமே அதிகம் இருந்தது.
இரண்டு பலுான்கள் மட்டும் பெரிய பலுான், அதில் காற்றை நிரப்பி அடியில் தொட்டி கட்டி அதில் நான்கு பேர் வரை நின்று கொண்டு பறக்கலாம் என்றனர், அதற்கேற்ப விழாவிற்கு வந்த அமைச்சர்கள் முக்கிய அதிகாரிகள் என நான்கு பேர் தொட்டியில் நிற்கவைக்கவும் பட்டனர் ஆனால் பலுானை பறக்கவிடவில்லை சும்மா போட்டோ எடுத்துக் கொண்டு இறங்கிவிட்டனர்.
காலை எட்டு மணிவரை எல்லா பலுான்களும் வேடிக்கை காட்டியதே தவிர எதுவும் பறக்கவில்லை மீதமிருக்கும் இரண்டு நாட்களிலாவது பறக்குமா? தெரியவில்லை.பலுான் கண்காட்சி இன்றும் நாளையும் மாலை நடைபெறும்.அனுமதி கட்டணம் உண்டு,விழா நடைபெறும் இடத்தில் கலை நிகழ்ச்சிகள்,உணவுக்கூடங்களும் உண்டு.
-எல்.முருகராஜ்