மகள் மரணத்தில் மர்மம்: விக்கிரவாண்டி பள்ளியில் மகளை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர்

2

விழுப்புரம்: '' விழுப்புரம் பள்ளியில் கழிவறை தொட்டியில் குழந்தை விழுந்து இறந்த விவகாரத்தில் நடந்த உண்மை என்ன என்பது தெரிய வேண்டும், '' என சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 3ம் வகுப்பு சிறுமி கழிவறை தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

இது தொடர்பாக குழந்தையின் தாயார் சிவசங்கரி கூறியதாவது: பள்ளியில் 37 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால், போலீசாரிடம் 32 கேமராக்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்திலும், எஸ்.பி., அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம். எனது குழந்தைக்காக உயர்நீதிமன்றத்திலும் மனு கொடுப்போம். இதை விட மாட்டோம். எங்கள் குழந்தைக்கு என்ன நடந்தது என தெரிய வேண்டும். எங்களுக்கு பணம் வேண்டாம். நீதி தான் வேண்டும்.

எங்கள் குழந்தைக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. உள்ளே ஏதும் ஆகியிருக்கலாம். ஏதோ நடந்திருக்கலாம். கழிவறைத் தொட்டியில் விழுந்தது என ஏன் சொல்கின்றனர்.
ஏதோ நடந்துள்ளது. பெற்றோருக்கு ஏன் தகவல் சொல்லவில்லை. எங்களுக்கு முன்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறுகின்றனர். ஆனால், ஏன பெற்றோரிடம் கூறவில்லை. தகவல் தெரிவிக்க வேண்டும். எங்களின் முதல் கேள்வி கழிவறை தொட்டியில் விழுந்து இருந்தாலும் முதலில் பெற்றோரிடம் தான் கூறியிருக்க வேண்டும். மொபைல்போன் எண்ணை வாங்கி வைத்து இருந்த போதும் ஏதும் கூறவில்லை. எனக்கூறினார்.

மற்றொரு டிவிக்கு அளித்த பேட்டியில், வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி ஆசிரியர் குழந்தையை அடித்துள்ளார். அதனால் எனது மகளுக்கு ஏதோ ஆகி உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க வேண்டும்.பள்ளியில் வைத்து நாடகம் நடத்தி உள்ளனர். இரண்டு மணிக்கு வருகைப்பதிவேடு எடுத்த போது இருந்த குழந்தை இருந்ததாவும், கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிறகு காணவில்லை என ஆசிரியை கூறியுள்ளார்.

பிறகு தேடிய போது கழிவறை தொட்டியில் டிரைவர்பார்த்த போது வெள்ளை கலர் ஷூ தெரிந்ததால், கம்பியை வைத்து தூக்கியதாக கூறுகின்றனர். இதனை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி எங்கள் குழந்தைக்கு மாற்றி என்ன நடந்தது எனக்கூற வேண்டும். எனது மகள் ரெட் கலர் ஷூ அணிந்திருந்தார். பள்ளி நிர்வாகத்தினர் வெள்ளை நிற ஷூ என சொல்கின்றனர். டிரைவரும் இதையே சொல்கிறார். இதில் தான் சந்தேகம் வருகிறது. கழிவறை தொட்டியில் விழுந்தால் உடல்மேல் சேறு இருக்க வேண்டும். அல்லது ஈரம் இருக்க வேண்டும். ஆனால், போலீசார் காட்டிய ஷூவில், ஒன்று கழிவறை தொட்டியில் விழுந்ததை போன்று கருப்பாகவும் மற்றொன்று வெள்ளையாகவும் இருக்கிறது.

ரிப்பன் ரத்தக்கறை உள்ளது. சட்டையில் இரண்டு இடத்தில் ரத்தம் உள்ளது. பிளீச்சிங் பவுடர் வாசம் வருகிறது. கழிவறை தொட்டியில் விழுந்த குழந்தை மீது இந்த வாசனை எப்படி வருகிறது.கழிவறைக்கு குழந்தை சென்றால், ஆசிரியர் உடன் சென்றிருக்க வேண்டும். யாரும் செல்லவில்லை. இவ்வாறு சிவசங்கரி கூறினார்.

சிசிடிவி காட்சிகள்



இந்நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பாக பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், கழிவறை தொட்டியில் பள்ளி ஊழியர்கள் தேடிய காட்சிகள் பதிவாகி உள்ளன. அதில், பெண் ஒருவர் கையில் குழந்தை உடன் சென்று வருவது பதிவாகி உள்ளது.

போலீசார் விளக்கம்



இது குறித்து போலீசார் வெளியிட்ட விளக்கத்தில் கூறியுள்ளதாவது: சிசிடிவியில் உள்ள குழந்தை, அந்த பள்ளியில் பணிபுரியும் தமிழ்செல்வி என்பவரின் குழந்தை. அது இறந்த லியா அல்ல. வேறு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு தேடிய நிலையில், அது லியா என தவறாக பரப்பப்படுகிறது என்றனர்.

Advertisement