போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தீவிர போர் அவசியம்: அமித் ஷா

20

புதுடில்லி:"போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,
இப்போது நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிகவும் மோசமாகிவிடும்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டில்லியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி.,) ஏற்பாடு செய்த “போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு” என்ற பிராந்திய மாநாடு நடைபெற்றது.

இதில் அமித் ஷா பேசியதாவது:
இந்திய மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேர் போதைக்கு அடிமையானவர்கள். இந்தியாவின் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க போதைப்பொருட்களுக்கு எதிராக சமரசமற்ற போராட்டம் அவசரமாக தேவை.

கடந்த பத்தாண்டுகளில் , ரூ.56,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 24 லட்சம் கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.2,411 கோடி மதிப்புள்ள 44,792 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களில் எரிக்கப்படும்.
போதைப்பொருள் முழு தலைமுறையையும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது, எந்தவொரு நாடும் அதன் இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் சிக்கினால் பாதுகாப்பாக இருக்க முடியாது.

ஒரு கிலோகிராம் போதைப்பொருள் கூட எல்லைக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement