தி.மு.க., ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் சாதனை: இ.பி.எஸ்., பேட்டி
சென்னை: '' தி.மு.க., ஆட்சியில் கடன் வாங்குவதில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக வெளியிட்ட 565 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான அறிவிப்புகளை கூட நிறைவேற்ற வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., ஆட்சியில் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலினும், உதயநிதியும் கூறினர். ஆனால், பெற்றோர்களையும், மாணவர்களையும் ஏமாற்றி இரட்டை வேடம் போடுகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் கையை விரித்துவிட்டார். நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என முதல்வர் அறிவிக்க வேண்டும். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எண்ணெய், அரிசி பருப்பு விலை உயர்ந்துள்ளது. இது குறித்து எந்த முதல்வர் எதுவும் கூறவில்லை. மிகவும் மோசமான தரமற்ற பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஓட்டை உடைசல் பஸ்கள் அனைத்துக்கும் ஸ்டாலின் பஸ் என பெயர் வைத்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப் பலன்கள் அளிக்கப்படவில்லை.
வருவாயை அதிகரித்து, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கலாம். ஆனால், கடன் வாங்கி கொடுக்கிறார். இப்படி கடன் வாங்கி கொண்டே சென்றால், எப்படி திருப்பி செலுத்துவது. வருவாயை அதிகரித்து உரிமைத்தொகை வழங்கினால் பாராட்டலாம்.அலங்கோல ஆட்சி நடக்கிறது.இந்தியாவில் வேறு மாநிலங்ளை காட்டிலும், கடன் வாங்குவதில் முதலிடமாக தமிழகம் உள்ளது. இதில் சாதனை படைத்துள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர் கூறியது சரி என்று தானே சபாநாயகர் சொல்வார். மாற்றி சொன்னால், அந்த இருக்கையில் அமர முடியுமா ?பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கில், நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு அனைத்து உண்மை வெளியே வரும்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதிமுக., வழக்கு தொடர்ந்த பிறகு வேக வேகமாக விசாரிக்கின்றனர். அதிமுக., இல்லை என்றால், வழக்கை மூடிமறைத்து இருப்பார்கள். இதில், முக்கிய பிரமுகர் ஒருவர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இதனால், யார் அந்த சார் என கேட்கிறோம். பெயரை சொல்லாத போதும் அவர்கள் கோபப்படுகின்றனர். அமைச்சர்கள் அறிக்கை வெளியிடுவதால் தான் சந்தேகம் எழுகிறது. நான் ஆதாரம் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்.
ஈ.வெ.ரா., குறித்த சீமானின் கருத்து வருத்தத்திற்குரியது. இறந்த தலைவரைப் பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.