துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித்குமார்
சென்னை: சமீபத்தில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, துபாய் 24எச் கார் ரேஸில் இருந்து நடிகர் அஜித்குமார் விலகி உள்ளார்.
இது தொடர்பாக அவரது அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துபாய் 24 எச் தொடருக்கான பயிற்சியின் போது அஜித்குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ரேஸ் வடிவம் மிகவும் கடினமானது. மேலும், நீண்ட சீசனுக்கு முன்னாள் இருக்கும் சவால்களை அணி கருத்தில் கொண்டது. அணியின் உரிமையாளர் மற்றும் அதன் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில், அஜித் குமாரின் நலன் மற்றும் அணிகளின் ஒட்டுமொத்த வெற்றி ஆகியவை முன்னுரிமையாக உள்ளன. விரிவான ஆலோசனைக்கு பிறகு, தங்கள் உத்தி மறுபரிசீலனை செய்யப்பட்டது.
மிகவும் தீவிரமான ஆலோசனைக்கு பிறகு, துபாய் 24 எச் ரேஸில் இருந்து அஜித்குமார் விலகுவது என்ற கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அவரின் தனிப்பட்ட லட்சியங்களை தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டிகள் நடக்கிறது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். போட்டிக்கு முன் நடந்த கார் ரேஸ் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக, அஜித் குமார் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி, அருகே இருந்த தடுப்புகள் மீது மோதி சுற்றி சுழன்று நின்றது. இதில், காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. எனினும், அந்த காரில் இருந்த அஜித் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.