டில்லியின் பா.ஜ., முதல்வர் வேட்பாளர் ரமேஷ் பிதுரி: கெஜ்ரிவால் கண்டுபிடிப்பு

புதுடில்லி: டில்லி முதல்வர் வேட்பாளர் ஆக ரமேஷ் பிதுரியை பா.ஜ., அறிவிக்கும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ., ஆகிய கட்சிகள் விறுவிறுப்பாக பிரசாரம் செய்து வருகின்றன. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் ஆக கெஜ்ரிவால் உள்ளார். அதேநேரத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நிருபர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லி சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் ஆக ரமேஷ் பிதுரி அறிவிக்கப்படுவார் என எங்களுக்கு தகவல் வருகிறது. பா.ஜ.,வின் முகமாக மாறி உள்ள ரமேஷ் பிதுரியை நான் வாழ்த்துகிறேன்.அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்கள் பொது வெளியில் விவாதம் நடத்த வேண்டும்.


10 ஆண்டுகள் எம்.பி., ஆக இருந்த ரமேஷ் பிதுரி டில்லிக்கு செய்தது என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். டில்லிக்கான தனது கொள்கை என்ன, மக்களின் பிரச்னைகளை தீர்வு என்ன என்பது குறித்தும் அவர் கூற வேண்டும்.தேர்தலுக்கு முன்னரே, என்னை முதல்வர் வேட்பாளர் ஆக ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துவிட்டது. உயர் பதவிக்கு யார் பொருத்தமான நபர் யார் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

ரமேஷ் பிதுரி யார்



பா.ஜ., எம்.பி.,யாக இருந்த ரமேஷ் பிதுரி தற்போது சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ளார். கடந்த 4ம் தேதி அவர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கன்னம் போல் டில்லி சாலைகள் அமைக்கப்படும் எனக்கூறி சர்ச்சையை ஆரம்பித்தார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க அவர் மன்னிப்பு கோரினார்.

Advertisement