ஹாக்கி: ஐதராபாத் அணி வெற்றி

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஐதராபாத் அணி 4-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சூர்மா அணியை வீழ்த்தியது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் சூர்மா (பஞ்சாப், ஹரியானா), ஐதராபாத் அணிகள் மோதின. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் சூர்மா அணியின் நிக்கோலஸ் டெல்லா டோரே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் சூர்மா அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 40வது நிமிடத்தில் ஐதராபாத் அணிக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் அமன்தீப் லக்ரா ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. அடுத்து நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ஐதராபாத் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐதராபாத் 2, சூர்மா ஒரு புள்ளி பெற்றன.
ஐதராபாத் அணி 7 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. சூர்மா அணி 8 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.




முதல் சீசன்


ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஜன. 12ல், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் துவங்குகிறது. டில்லி, ஒடிசா, பெங்கால், சூர்மா என 4 அணிகள் பங்கேற்கின்றன. பைனல் ஜன. 26ல் நடக்கிறது. முதல் போட்டியில் (ஜன. 12) டில்லி-ஒடிசா அணிகள் மோதுகின்றன.

Advertisement