மதுபானக் கொள்கையால் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பா? சிஏஜி அறிக்கை கசிவு: பா.ஜ., ஆம் ஆத்மி மோதல்

2

புதுடில்லி: டில்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக சி.ஏ.ஜி.,யின் அறிக்கை இணையதளத்தில் கசிந்துள்ளது. அதில், இந்த முறைகேடு காரணமாக அரசிற்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. பிப்., 5ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் காரணமாக இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த குற்றச்சாட்டு அங்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது. முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஆகியோர் சிறை சென்றனர். இதனால், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் பதவி விலக நேரிட்டது.

இந்நிலையில் மதுபானக் கொள்கை குறித்த மத்திய தணிக்கை குழுவின் (சிஏஜி) அறிக்கை இணையதளத்தில் கசிந்துள்ளது.
அதில், '' டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒப்படைக்கப்பட்ட சில்லரை மதுபான லைசென்ஸ்களை மீண்டும் டெண்டர் விட தவறியதால் ரூ.890 கோடியும், மண்டல லைசென்ஸ் பெற்றவர்களுக்கு அளித்த விலக்கு காரணமாக ரூ.941 கோடியும் இழப்பு ஏற்பட்டது. இதற்காக கவர்னர் மற்றும் அமைச்சரவை மற்றும் சட்டசபை முடிவுகள் கண்டுகொள்ளப்படவில்லை. இது குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரையை மணீஷ் சிசோடியா தலைமையிலான குழு புறந்தள்ளியது எனக்கூறப்பட்டு உள்ளது.
தற்போது, இந்த விவகாரம் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஆம் ஆத்மியின் கொள்கைகள் அனைத்தும் சிறந்தது என்றால், அதனை திரும்ப பெற்றுக் கொண்டது ஏன்டில்லியின் சேதம் அடைந்த சாலை, வீடுகளுக்கு அழுக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டண உயர்வு, மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றிற்க்கு ஆம் ஆத்மியிடம் எந்த பதிலும் இல்லை. அக்கட்சியிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என டில்லி மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்து ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: இந்த அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன? பா.ஜ.,விடம் நகல் ஏதும் உள்ளதா? அந்த அறிக்கை பா.ஜ., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது போல் தெரிகிறது. பா.ஜ.,வுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. அக்கட்சி மன ரீதியில் நிலையற்றதாக உள்ளது. அனைத்துக்கும் பதில் சொல்ல முடியாது. ஒரு பக்கம் சிஏஜி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்கின்றனர் . மறுபுறம் அதனை வெளியிடுகின்றனர். இதனை என்ன சொல்வதுஎன்றார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் கூறியதாவது: சிஏஜி அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏன். இந்த விவகாரத்தில் பா.ஜ., ஆம் ஆத்மி இடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளது. இந்த கொள்கை முறைகேடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசின் நிதியை கெஜ்ரிவால் அரசு காலி செய்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement