கோப்பை வெல்வாரா ஜோகோவிச் * ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் துவங்குகிறது. இத்தொடரில் 10 முறை கோப்பை வென்றுள்ளார், உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச் 37. சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், மீண்டும் சாதிக்கலாம். இவருக்கு உலகின் 'நம்பர்-1' வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜானிக் சின்னர் சவால் கொடுக்கலாம். 2024ல் சின்னர் பங்கேற்ற 79 போட்டியில் 73ல் வென்றுள்ளார். 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ஜிவரேவ் உள்ளிட்டோரும் பட்டம் வெல்ல முயற்சிக்கலாம்.
ஜோகோவிச், முதல் சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிஷேசை எதிர்கொள்கிறார்.
வருமா 'ஹாட்ரிக்'
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோதுகிறார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இதுவரை 6 கோப்பை வென்ற சபலென்கா, இத்தொடரில் கடந்த 2022, 2023ல் சாம்பியன் ஆனார். இம்முறை அசத்தினால் 'ஹாட்ரிக்' கோப்பை வசப்படுத்தலாம்.
ஆஸ்திரேலியாவில் பங்கேற்ற 28 போட்டிகளில் 27ல் வென்றுள்ளார். போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியன் பாவோலினி, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா நம்பிக்கை தருகின்றனர்.

100 வது பட்டம்

சர்வதேச டென்னிஸ் ஒற்றையரில் ஜோகோவிச் இதுவரை 99 பட்டம் வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் சாதிக்கும் பட்சத்தில், தனது 100 வது பட்டத்தை கைப்பற்றலாம். ஒற்றையரில் 100, அதற்கும் மேல் என கோப்பை வென்ற மூன்றாவது வீரர் ஆகலாம். முதல் இரு இடத்தில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (106), சுவிட்சர்லாந்தின் பெடரர் (103) உள்ளனர்.
* கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஜோகோவிச், இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் (10), பிரெஞ்ச் ஓபன் (3), விம்பிள்டன் (7), யு.எஸ்.ஓபன் (4) என மொத்தம் 24 பட்டம் வென்றுள்ளார். இம்முறை அசத்தினால், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 25 வது கோப்பை கைப்பற்றலாம்.

Advertisement