அரையிறுதியில் கர்நாடகா
வதோதரா: விஜய் ஹசாரே டிராபி தொடரின் அரையிறுதிக்கு கர்நாடகா முன்னேறியது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி ('லிஸ்ட் ஏ') 32வது சீசன் நடக்கிறது. நேற்று வதோதராவில் நடந்த காலிறுதியில் கர்நாடகா, பரோடா மோதின. 'டாஸ்' வென்ற பரோடா, பீல்டிங் தேர்வு செய்தது.
தேவ்தத் சதம்
கர்நாடக அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் (6), தேவ்தத் படிக்கல் ஜோடி துவக்கம் தந்தது. அனீஷ் (52) கைகொடுக்க, தேவ்தத் (102) சதம் அடித்தார். கர்நாடக அணி 50 ஓவரில் 281/8 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய பரோடா அணிக்கு ஷாஷ்வத் (104), ஆதித் (56) உதவினர். பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 5 ரன்னில் திரில் வெற்றி பெற்ற கர்நாடகா, அரையிறுதிக்கு முன்னேறியது.
அர்ஷின் அபாரம்
மற்றொரு காலிறுதியில் மஹாராஷ்டிரா, பஞ்சாப் மோதின. மஹாராஷ்டிரா அணிக்கு அர்ஷின் (107) சதம் கைகொடுக்க, 50 ஓவரில் 275/6 ரன் எடுத்தது. பஞ்சாப் அணி 44.4 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. 70 ரன்னில் வென்ற மஹாராஷ்டிரா அரையிறுதிக்குள் நுழைந்தது.