பொங்கல் பண்டிகை கொண்டாட சிறப்பு பஸ்கள்

நாளை மறுநாள் ஜன.14ல் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட நேற்று முதல் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள், ரயில்களும் இயக்கப்படுகிறது.

இதனால் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் நேற்று காலை முதல் வெளியூர் மக்கள் வரத்து துவங்கியது.

அரசின் சார்பில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் கரும்பு, பச்சரிசி, சீனி, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு மக்கள் வாங்கி செல்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் பழைய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை சுத்தம் செய்து போகி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.

இதனையடுத்து தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையுடன் கொண்டாடுவதற்கு தயாராகும் வகையில் பஜார் வீதிகளில் வெல்லம், பனங்கிழங்கு, கோலப்பொடி விற்பனை மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் விறுவிறுப்பாக துவங்கி உள்ளது.

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ராஜபாளையம், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை, பிள்ளையார் நத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் மாசி மாதம் வரை பனங்கிழங்கு விளைச்சல் ஏற்பட்டு தற்போது பஜார் வீதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.120, ரூ.150, ரூ.180 வரையிலும் விற்கப்படுகிறது. இன்றும், நாளையும் விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்ப்புடன் பஜார் வீதிகளில் பனங்கிழங்கு வியாபாரிகள் மக்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதேபோல வெல்லம் விற்பனை அதிகரித்து வருவதாக மொத்த விற்பனை கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூர் தேவை மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் வெல்லம் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஒரு கிலோ வெல்லம் ரூ. 55 என விற்று வந்த நிலையில் தற்போது ரூ.10 அதிகரித்து ரூ.65க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கோலப்பொடி விற்பனையும் களைகட்டி வருகிறது. பஜார் வீதிகள் மட்டுமின்றி தெருக்களிலும் பெண்கள் சுய தொழிலாக கோலப்பொடிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பாக்கெட் ரூபாய் 5 முதல் அரை கிலோ, ஒரு கிலோ, ஒரு படி என்ற அளவில் கலர் கோலப்பொடி, வெள்ளை நிற கோலப்பொடிகளும் விற்பனை செய்யப்படுகிறது வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக அளவில் கலர் கோலப்பொடி விற்பனை நடப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் தைப்பொங்கலை முன்னிட்டு பனங்கிழங்கு, வெல்லம், கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Advertisement