மதுபார் திறப்புக்கு எதிர்ப்பு பொது மக்கள் மறியல்

பெரியகுளம் : பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் தனியார் மதுபார் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் கடைக்கு பூட்டு போட்டனர்.

பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் தனியார் மதுபார் நேற்று திறக்கப்பட்டது.

இந்தப்பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் உள்ளன.

தனியார் மதுபாரை மூடக்கோரி வடகரை நவாப் ஜாமியா மஸ்ஜித் தலைவர் அப்பாஸ், வி.சி.க., மண்டல செயலாளர் தமிழ்வாணன், குடியிருப்பு பகுதி பெண்கள் உட்பட ஏராளமானோர் பஸ்ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் அரை மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

எஸ்.ஐ., விக்னேஷ் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, போலீசார் கடைக்கு பூட்டு போட்டனர். இதன்பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.-

Advertisement