அந்த சார் யார் என தெய்வம் நின்று கேட்கும்; பன்னீர்செல்வம்
அவனியாபுரம்: ''தெய்வம் நின்று கேட்கும்; அப்போது அந்த சார் யார் என்பது தெரியும்'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான சட்ட திருத்தம் அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வழி வகுக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.
தி.மு.க., வை பொறுத்தவரை தேர்தலுக்கு முன் ஒரு பேச்சும் அதற்கு பின் ஒரு பேச்சுமாக பேசுகின்றனர். இது ஒரு வாடிக்கையானது தான். டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதலில் குரல் கொடுத்தவர்கள் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு ஆகிய நாங்கள்தான். அதை தடுத்து நிறுத்துகின்ற இயக்கமாக எங்கள் இயக்கம் இருக்கும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார பிரச்னையில், தெய்வம் நின்று கேட்கும்.
அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றுவதாக த.வெ.க., விஜய் கூறியுள்ளார். அருமை நண்பர் விஜய்க்கு இப்போது தான் தெரிகிறதா. தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இது தெரிந்து விட்டதே என்றார்.