சென்னை ரவுடி கனகராஜ் மதுரையில் சுற்றி வளைப்பு
மதுரை : சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி கனகராஜ், மதுரையில் நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் கனகராஜ் 40. இவர் பிரபல ரவுடி பினுவின் கூட்டாளி. கடந்த 2018 பிப்.,ல் சென்னையில் பினுவின் பிறந்தநாளை அவரது கூட்டாளிகள் 75 பேர் சேர்ந்து கொண்டாடியபோது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது கனகராஜ் உட்பட மூவர் தப்பிச்சென்றனர். பின்னர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டனர்.
கனகராஜ் மீது பூந்தமல்லி, குன்றத்துார், வடபழநி போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளன. பினு மீது போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமானதை தொடர்ந்து கூட்டாளிகள் பலர் பதுங்கி வாழ்கின்றனர். இந்நிலையில் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கனகராஜை நேற்று சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையறிந்த அவரது மனைவி மேகலா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில்'' என் கணவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 2 குழந்தைகளுடன் நான் வாழ்கிறேன். பழைய பிரச்னையை காரணமாக வைத்து அவரை கைது செய்துள்ளனர். என்கவுன்டர் செய்யப் போவதாகவும் மிரட்டி இருக்கின்றனர். அவர் இல்லைனா நாங்களும் இருக்க மாட்டோம்'' என தெரிவித்துள்ளார்.