கதண்டு கொட்டிய 7 பேருக்கு சிகிச்சை

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கதண்டு கொட்டி காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விருத்தாசலம் அடுத்த கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி செல்வி, 65. நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அடுப்பு மூட்டி, நெல் அவித்தார். அப்போது, புகை பரவியதில் அங்கிருந்த புளிய மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து செல்வியை கொட்டித் தீர்த்தன.

அவரது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சேட்டு மனைவி சவுந்தரவள்ளி, முத்துமணி மகன் வீரமணி, 33, இவரது மனைவி அம்சவள்ளி, 28, கோபாலகிருஷ்ணன் மனைவி பிரியா, 27, அன்பழகன் மனைவி செல்வி, 34, தம்பு சாமி, 60, ஆகியோரையும் கொட்டியது.

காயமடைந்த அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். அதில், மூதாட்டி செல்வி, மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

நெல் அவிக்க அடுப்பு மூட்டியதால் கதண்டுகள் கொட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement