4வழிச்சாலையில் கொட்டப்படும் ஆலைக்கழிவு
கீழடி : மதுரை--பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி இருபுறமும் நவீன அரிசி ஆலை கழிவுகளை பலரும் தொடர்ச்சியாக கொட்டி வருகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையை ஒட்டி பலரும் குப்பை கொட்டி அசுத்தப்படுத்துவதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மதுரையை ஒட்டிய சிலைமான், புளியங்குளம், கீழடி பகுதிகளில் சாலையின் இருபுறமும் தெர்மோகோல் அட்டை, மீன், கோழி இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக நான்கு வழிச்சாலையை ஒட்டி சிலைமான், புளியங்குளம், கீழடி, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் அரிசி ஆலை கழிவுகளை இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். பகலில் காற்று வீசும் போது கரித்துகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகின்றன.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை செல்பவர்கள் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல் நவீன அரிசி ஆலை கழிவுகளுக்கு பயந்து மணலுார், சிலைமான், புளியங்குளம் வழியாக மதுரை சென்று வருகின்றனர்.
கீழடியை ஒட்டி கழிவுகளை கொட்டுவதால் காற்றில் பறந்து கீழடி அருங்காட்சியகம் முழுவதும் படர்ந்து பொருட்கள் மாசுபட்டு வருகின்றன. எனவே நான்கு வழிச்சாலையை ஒட்டி குப்பை, அரிசி ஆலை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.