திருப்புவனத்தில் குடிநீர் தட்டுப்பாடு
திருப்புவனம் : திருப்புவனத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. அதை அப்படியே விட்டு சென்று விடுவதால் சப்ளை இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
திருப்புவனத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருப்புவனம் பேரூராட்சி சார்பில் கோட்டை மற்றும் புதுார் ஆகிய இடங்களில் வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நகர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் குழாய் பதிக்கும் ஒப்பந்தகாரர்கள் குழாய் பதிக்கும் பணியின் போது குடிநீர் செல்லும் பழைய குடிநீர் குழாயை சேதப்படுத்தும் நிலையில் அதனை சரி செய்யாமல் அப்படியே போட்டு விடுகின்றனர். குழாய் சேதமடைந்ததால் நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
திருப்புவனம் பழையூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் 20 அடி துாரத்திற்கு குழாய் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இன்று வரை சரி செய்யாததால், பழையூர் பகுதி மக்கள் குடத்துடன் அலைந்து வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.