தேர்தல் துறை விழிப்புணர்வு பேட்மிண்டன் போட்டி துவக்கம்
புதுச்சேரி : புதுச்சேரி தேர்தல் துறையின் முறையான வாக்காளர் கல்வி மற்றும் பங்கேற்பு திட்டம் (ஸ்வீப்) சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பேட்மிண்டன் போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.
15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நெல்லித்தோப்பு, நியூ ஸ்மாஷ் பேட்மிண்டன் கிளப்பில் இரண்டு நாள் நடக்கும் போட்டியினை புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் துவக்கி வைத்தார்.
துணை மாநில தேர்தல் அதிகாரி தில்லைவேல், 'ஸ்வீப்' மாநில திட்ட அதிகாரி பேராசிரியர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடக்கும் இப்போட்டிகளில் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட பங்கேற்று உள்ளனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தின விழாவில், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இப்போட்டி, தேர்தல் துறையின் வாக்காளர் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் புதிய முயற்சி என கூறியதுடன், மாணவர்கள், அரசு ஊழியர்கள் வாக்காளர் விழிப்புணர்வின் துாதுவர்களாக செயல்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டார்.