குடிமகன்கள் மோதல் 3 பேர் கைது
பாகூர் : சோரியாங்குப்பத்திற்கு குடிமகன்கள் இடையே ஏற்பட்ட மோதலில், தச்சு தொழிலாளி படுகாயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், வண்டிப்பாளையம் அடுத்த கொடிக்கால்குப்பம் குருமணி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (எ) ராம்குமார் 37; தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோபி 19; சுரேந்தர் 24; தரணிதரன் 20; ஆகியோருக்கும் இடையே, கடந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
ராம்குமார் நேற்று முன்தினம் பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மது கடையில் குடித்துக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த கோபி, சுரேந்தர், தரணிதரன் ஆகியோருக்கும், ராம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த கும்பல், ராம்குமாரை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த அவர் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபி, சுரேந்தர், தரணிதரன் ஆகியோரை கைது செய்தனர்.