எச்.எம்.பி.வி., பாதித்த சிறுவன் குணமடைந்து வீடு திரும்பினார்

புதுச்சேரி : புதுச்சேரியில் எச்.எம். பி.வி., வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுவன் குணமடைந்து வீடு திரும்பினார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடைய தொண்டை சளியை ஜிப்மர் மருத்துவமனையில் 'ஆர்டி-பி.சி.ஆர்' (ஏற்கனவே கொரோனாவிற்கு பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறை) முறையில் ஆய்வு செய்ததில் அவருக்கு எச்.எம்.பி.வி., (ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்) தொற்று பாதிப்பு உறுதியானது.

அதைத்தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிறுவன் குணமடைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், நலமுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இதற்காக புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்காக ஆறு படுக்கை கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது.

இதேபோன்று கோரிமேடு நெஞ்சக மருத்துவ மனை வளாகத்தில் பெரியவர்களுக்கான 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளது. எச்.எம்.பி.வி., நோய் தொற்று பரிசோதனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.

விரைவில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்த உபகரணங்கள் வாங்கப்படவுள்ளது' என்றார்.

Advertisement