மதுபான ஆலை அனுமதியை கவர்னர் தடை செய்ய வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தல்

புதுச்சேரி : மதுபான ஆலை அனுமதியை கவர்னர் தடை செய்ய வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., அரசு தொடர்ந்து மது கொள்கையை ஆதரித்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

டில்லியில் நடந்த மதுபான ஊழல் போல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்., அரசுடன் காங்., மற்றும் தி.மு.க., இணைந்து மறைமுகமாக மதுபான ஆலையை ஆதரிக்கின்றனர். இதன் மூலம் எதிர்க்கட்சியின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்து வருகின்றனர்.

இதுவரை 6 பெரிய மதுபான ஆலை விவகாரத்தில் நடந்த ஊழலை கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

மதுபான ஆலைகள் மூலம் ஒரு நாளைக்கு பல லட்சம் தண்ணீர் நிலத்தடி நீரை உரியக்கூடிய நிலைமை வரும். இதனால், எதிர்காலத்தில் மாநிலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கக்கூடிய சூழல் உருவாகும்.

முதல்வர் ரங்கசாமி மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. இந்த விஷயத்தில் தி.மு.க., காங்., ஏன் இதுவரை எதிர்க்கவில்லை. மதுபான ஆலையை அவர்கள் ஆதரிக்கிறார்களா என்பதை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.

மது கடைகளை எதிர்க்கும் நாராயணசாமி மது ஆலைகளை ஏன் எதிர்க்கவில்லை. இரட்டை வேடம் போடும், காங்., மற்றும் தி.மு.க., உண்மையில் என்.ஆர்.காங்.,குடன் கூட்டு வைத்திருப்பதால், பாதிப்பது மக்கள் தான். மக்கள் நலனை கருத்தில் கொண்டு கவர்னர் உடனடியாக மது ஆலைகளை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement