கல்வித் துறை கட்டடத்தில் 'லிப்ட்' பழுது; பொதுமக்கள் கடும் அவதி

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள காமராஜர் கல்வித் துறை வளாகம் ஏ மற்றும் பி பிளாக்குடன் ஐந்து மாடிகளை கொண்டுள்ளது. தரைதளத்தில் தபால் பிரிவு இயங்குகிறது. முதல்தளத்தில் கல்வி துறை இயக்குனர் அலுவலகம், நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது.


இரண்டாவது தளத்தில் இணை இயக்குனர், ஆரம்ப கல்வி துணை இயக்குனர் அலுவலகம், மூன்றாவது தளத்தில் முதன்மை கல்வி அதிகாரி, துணை இயக்குனர் பெண்கல்வி, கல்வி சட்ட பிரிவு செயல்படுகின்றன.


நான்காவது மாடியில் மதிய உணவு பிரிவு, மாநில பயிற்சி மையம், தேர்வு பிரிவும், ஐந்தாவது மாடியில் அனைவருக்கும் கல்வி, கல்வி கட்டண நிர்ணய குழு அலுவலகம் இடம் பெற்றுள்ளது.


இந்த அலுவலகங் களுக்கு சென்று வர இரண்டு பிளாக்குகளிலும் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லிப்ட்டுகளும் ஒராண்டிற்கு மேலாக பழுதாகி கிடப்பதால், கல்வித் துறைக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


குறிப்பாக குறைகளோடு வரும் மாற்று திறனாளிகள், முதியோர்கள் மாடி படிகளை கண்டு நொந்துபோய் வந்த வழியே திரும்பி சென்று விடுகின்றனர்.


இதேபோல் வேலைக்கு வரும் 50 வயதை தாண்டிய அதிகாரிகள், ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


ஆனால், பள்ளி கல்வித் துறையோ ஏனோ லிப்டுகளை பழுது செய்ய ஆர்வம் காட்டாமல் உள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கல்வித் துறைக்கு அதிக அளவில் குறைகளோடு வருகின்றனர்.


இது போன்ற சூழ்நிலையில் லிப்ட் செயல்படாமல் பழுதடைந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பழுதான லிப்டினை விரைவாக சரி செய்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement