திருப்புத்துாரில் மண் பானை விற்பனை

கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் பகுதியில் பரவலாக பாரம்பரியமாக பொங்கல் வைக்க பயன்படும் மண்பானைகள் விற்பனை களை கட்டியுள்ளது.

தற்போது சமையலுக்கு மண் பாத்திரங்களிலிருந்து உலோக பாத்திரங்களுக்கு அனைவருமே மாறி விட்டனர். இருப்பினும் மண்பானை சமையல் மீண்டும்தலை துாக்கியுள்ளது. உணவகங்களில் மீண்டும் மண்பானையில் சமைக்க துவங்கியுள்ளனர்.

அதே போல பொங்கல் என்றாலே முன்னர் மண் பானையில் பொங்கலிடுவது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் நகர்புறங்களில் குடியேறியவர்கள் பலரும் பாத்திரங்களில் பொங்கல் வைக்க துவங்கி மண்பானை பொங்கல் கிராமங்களில் கூட அரிதாக துவங்கியது.

தற்போது மீண்டும் பலரும் மண்பானைகளில் பொங்கல் வைக்கத் துவங்கியுள்ளனர். மீண்டும் பாரம்பரியத்தில் மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். திருப்புத்துார் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் மண் பானை விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. பானை கடைகளும் அதிகரித்துள்ளன.

கீழச்சிவல்பட்டி சிவன் கோயில் அருகே பல தலைமுறைகளாக பானை விற்பவர்கள் கூறுகையில், 'இளையாத்தங்குடியில் நாங்கள் பாரம்பரியமாக பானை செய்பவர்கள். தற்போதும் செய்து வருகிறோம். மண் தட்டுப்பாடு, தொழிலாளர் பற்றாக்குறையால் அழகர்கோயில் பகுதியில் வாங்கி வந்தும் விற்கிறோம்.

தற்போது பொங்கல் நேரத்தில் பானை, கலயம், அடுப்பு விற்பனை வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்' என்றார்.

Advertisement