விபத்து உயிரிழப்பு: டி.ஐ.ஜி., ஆதங்கம்

புதுச்சேரி சட்டம் ஒழுங்கு மற்றும் கடந்த ஆண்டு நடந்த குற்ற வழக்குகள் குறித்து போலீஸ் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், புதுச்சேரி அழகிய சுற்றுலா நகரம். நாட்டின் பல பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், அகில இந்திய அளவில் சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநில பட்டியலில் புதுச்சேரி இடம்பெற்றுள்ளது வேதனை அளிக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு புதுச்சேரி முழுதும் 26 கொலை சம்பவங்கள் நடந்தது. கடந்த 2024ம் ஆண்டு 25 கொலை சம்பவங்களே நடந்தாலும், அவை குடும்ப பிரச்னை, திடீர் கோபம் உள்ளிட்டவையால் நடந்தது. ஆனால், புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு 212 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120க்கும் மேல் உள்ளது.

கொலை செய்யப்பட்டாலும் உயிர் தான் பிரிகிறது. விபத்து ஏற்பட்டாலும் உயிர்தான் பிரிகிறது. கொலை சம்பவத்தை தடுக்க வேண்டும் என காட்டும் ஆர்வம், விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என யாரும் முன்வருவதில்லை.

கொலை நடந்தால் எப்படி நடந்தது, யார் செய்தது என பலரும் ஆர்வமாக விசாரிக்கின்றனர். ஆனால், விபத்தில் ஒரு உயிர் பிரிந்தால் அதை பற்றியும், அவரது குடும்பத்தின் நிலை குறித்தும் பெரிதாக யாரும் எடுத்து கொள்வதில்லை என, ஆதங்கப்பட்டார்.

Advertisement