சோலார் பவர் டில்லர் விவசாயிகளுக்கு வழங்கல்
புதுச்சேரி : இளங்காடு விவசாயிகளுக்கான சோலார் பவர் டில்லர் இயந்திரத்தை ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி உருவாக்கி வழங்கியுள்ளது.
கெங்கராம்பாளையம், ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி விவசாயிகளுக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அடிப்படையாக கொண்டு பவர் டில்லர் இயந்திரம் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தை கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் உன்னத பாரதப் பணி ஒருங்கிணைப்பாளர்கள் அன்புக்கரசி, தனலட்சுமி ஆகியோர் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, கல்லுாரியின் உன்னத பாரதப் பணி திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் நிதியில் உருவாக்கிய சோலார் பவர் டில்லர் இயந்திரம் இளங்காடு விவசாயிகளுக்காக கிராம தலைவர் விஜயனிடம் வழங்கப்பட்டது.
இதில், கல்லுாரியின் இயந்திரவியல் துறை பேராசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட இளங்காடு கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த சோலார் பவர், டில்லர் விவசாயிகளுக்கு குறைந்த செலவில், சூழலுக்கு ஏற்ற தீர்வை வழங்குகிறது.
இத்திட்ட குழுவினரை கல்லுாரித் தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், கல்லுாரி முதல்வர் மகேந்திரன், அகாடெமிக்ஸ் டீன் கனிமொழி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.