மாவட்டத்தில் வாகன விதிமீறல்கள்; போலீசார் வழக்கு பதிந்தாலும் அலட்சியம்

சிவகங்கை மாவட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள், 445 ஊராட்சிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமச்சாலைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் சாலை விபத்துக்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் 5 மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான டூவீலர்கள் உள்ளன. கிராமச்சாலைகள் அதிகமுள்ள இம்மாவட்டத்தில்வாகன விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆண்கள், பெண்கள் இருவருமே வாகன விதி மீறல்களில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது. கடந்த ஆண்டு 8ஆயிரத்து 924 ஓவர் ஸ்பீடு வழக்குகள், 3 ஆயிரத்து 962 சிக்னலை மீறி சென்ற வழக்கு, 15 ஆயிரத்து 195 போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய வழக்கு, 5 ஆயிரத்து 643 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கு, கூடுதல் எடையுடன் சென்றதாக 246 வழக்கு, 2 லட்சத்து 43 ஆயிரத்து 592 ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டியவழக்கு, 42 ஆயிரத்து 624 காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வழக்கு, இதர வாகன விதி மீறல் வழக்குகள் என கடந்த ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசாரும் தொடர்ந்து விதிகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்கள்மீது வழக்கு பதிவு செய்கின்றனர். சில வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் டூவீலர் ஓட்டக் கொடுக்கும் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. டூவீலரில் அதி வேகத்தில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது, அதிக பழுவுடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் நடக்கிறது. இதனால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

தற்போது அபராத தொகையின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விதிமீறல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பல்வேறு துறைகள் சார்பில் நடத்தப்படுகிறது. இருப்பினும் வாகனங்களை விதிகளை மீறி இயக்குவது குறையவில்லை.

போலீசார் விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிந்தாலும் ஆண்டுதோறும் விதிமீறல் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. பொதுமக்கள் தங்களின் கடமை உணர்ந்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கினால் சாலை விபத்துக்களால் நடக்கும் உயிரிழப்புகளை தடுக்கலாம்.

Advertisement