சாலையில் நடந்து சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்
போபால்: மத்திய பிரதேசத்தில், சாலையில் நடந்து சென்ற நபரை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்ற போலீசார், ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, அவருக்கு 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள பன்னா நகரில் வசித்து வருபவர் சுஷில் குமார் சுக்லா.
இவர் சமீபத்தில், தன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். சாலையில் சென்ற அவரை உரசியபடி, போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்த போலீசார், விபரங்கள் எதுவும் சொல்லாமல் சுஷில் குமாரை, வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி குண்டுகட்டாக அஜய்கர் போலீஸ் ஸ்டேஷனுக்கு துாக்கி சென்றனர்.
அங்கும் எதுவும் பேசாமல், சில மணி நேரம் அவரை அமர வைத்ததாக கூறப்படுகிறது.
தன் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போக வேண்டும் என பலமுறை சொல்லியும் கேட்காமல், அவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர்.
சில மணி நேரத்துக்கு பின், ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த பைக்கின் பதிவு எண்ணை, ஒரு சலானில் எழுதி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக சுஷில்குமாருக்கு, போலீசார் 300 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அபராதத்தை செலுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தனக்கு நேர்ந்த அவலம் குறித்து பன்னா மாவட்ட எஸ்.பி.,யிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
அதில், 'நடந்து சென்ற என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற போலீசார், ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி, 300 ரூபாய் அபராதம் விதித்தனர்' என, ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
'இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என பன்னா எஸ்.பி., உறுதியளித்ததாக கூறப்படுகிறது.