வெளிப்படை தன்மையுடன் நெல் கொள்முதல்; கலெக்டர் அட்வைஸ்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:

மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 34, ஸ்ரீமுஷ்ணம் 42, விருத்தாசலம் 32, சிதம்பரம் 25 என, மொத்தம் 235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.அந்தந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு நிர்ணயித்துள்ள சுற்றுவட்ட பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகளுக்கு வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் நெல்கொள்முதல் செய்யப்படும். பணிபுரியும் அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சரிவர மேற்கொள்ள வேண்டும்.

கொள்முதல் செய்யும் போது நெல்லுக்கு அரசு நிர்ணயித்துள்ள அளவின்படி ஈரப்பதம் குறித்து கணக்கீடு செய்யவும், விவசாயிகளின் பதிவு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யவும், பதிவு மற்றும் கொள்முதல் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் எவ்வித பாகுபாடுமின்றி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என பேசினார்.

மேலும், இடைத்தரகர்களிடம் செல்லாமல் நேரடியாக கொள்முதல் நிலையத்தை அணுகி நெல்லை விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என்றும், புகார்களை 04142-220700 என்ற தொலைபேசியில் விவசாயிகள் தெரிவிக்கலாம் என, கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிதம்பரம் சப் கலெகட்ர் ராஷ்மி ராணி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தங்கபிரபாகரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement