வனத்துறையில் கால்நடை டாக்டர்கள் நியமிக்கணும்; வன உயிரினங்கள் சிகிச்சைக்கு அவசியம்

கம்பம்: வனத்துறையில் தேவையான எண்ணிக்கையில் கால்நடை டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி முழுவதும் தற்போது புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை பகுதிகள் கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது. மேகமலை இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5 வது புலிகள் காப்பகமாகவும் உள்ளது.

காப்பக பகுதியில் வேட்டைகளை தடுக்கும் நடவடிக்கைகள் 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வன உயிரினங்கள் நோய் தாக்குதல், காயப்படுதல் போன்றவற்றிற்காக சிகிச்சையளிப்பது அவசியமாகும்.

ஒரு உயிரினம் இயற்கை மரணமடைந்தாலும், அல்லது சந்தேகமாக இறந்து கிடந்தாலும் உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்ய வேண்டும். இறப்பிற்கான காரணம் பதிவு செய்யவேண்டும். புலிகள் இறந்தால், தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையின் அனுமதி பெற்றே உடற்கூராய்வு செய்ய வேண்டும். இப் பணிகளை மேற்கொள்ள கால்நடை டாக்டர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை.

மூன்று மாவட்டங்களுக்கு ஒரே டாக்டர்



முதுமலையில் 4 , கோவையில் 4, ஒசூரில் 2 என எல்லா காப்பகங்களிலும் வனத்துறையில் கால்நடை டாக்டர்கள் உள்ளனர். மேகமலை காப்பகத்திற்கு மதுரையில் ஒருவர் மட்டும் உள்ளார். மூன்று மாவட்டங்களுக்கு ஒரு டாக்டர்தான். வனப்பகுதியில் உடற்கூராய்வில் பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கால்நடைதுறை டாக்டர்களை உதவிக்கு அழைத்துக் கொள்கின்றனர்.

மதுரையில் உள்ள ஒரு டாக்டரும், கால்நடை பராமரிப்பு துறையில் இருந்து மாற்றுப் பணியாக சென்றுள்ளார்.

எனவே வன உயிரினங்களின் சிகிச்சை, ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, வனத்துறைக்கு தேவையான எண்ணிக்கையில் பிரத்யேகமாக கால்நடை டாக்டர்களை நியமனம் செய்ய இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement